Wednesday, March 27, 2013

விட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்


     தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நான் அசோகமித்திரனுடன் இணைத்து விட்டல்ராவையும்  வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னைப் பெருநகர வாழ்க்கையை எழுதிப் பார்த்த கைகளுள் விட்டல்ராவிற்கு ஒரு பிரதான பங்கிருக்கிறது. என்னுடைய வாசக அவதானிப்பில் அசோகமித்திரனின் நிழலாக நான் விட்டல்ராவைக் கருதுவதுண்டு.
ஒரு காலத்தில் சக பயணியாக கூடவே வந்து, இன்றைக்கு பல்வேறு காரணங்களால் எழுத்தைத் துறந்து வாழ்கின்ற தஞ்சாவூர் நண்பர் இளங்கோ, எனக்கு விட்டல்ராவின் கதைகள் குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தினார். இளங்கோவைப் போலவே நட்சத்ரன், கவிஜீவன், புத்தகன் என தஞ்சாவூரிலிருந்து மிக நுட்பமான கதை சொல்லிகளாக அடையாளம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பட்டாளமே ஏதேதோ காரணங்களால் எழுதுவதை நிறுத்திக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதில் புத்தகன் என்கிற சிங்காரவேலு, சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனார். இவர்கள் எல்லோரும் சுபமங்களா காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டல்ராவைப் பேச வந்த இடத்தில் தஞ்சாவூர் நண்பர்களைக் குறித்தும் மெல்லிய கோடிட்டுக் காட்ட வாய்த்தது ஆறுதலாக இருக்கிறது.
Ôவாழ்வின் சில உன்னதங்கள்Õ என்று விட்டல்ராவ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கி கீக்ஷீவீtமீக்ஷீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் விமீனீஷீவீக்ஷீ என்று அதைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விட்டல்ராவின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களோ மதிப்புரைகளோ அதில் கிடையாது. முழுக்கவும் அவர் பழைய புத்தகக்கடைகளில் விலைக்கு வாங்கிய புத்தகங்களைக் குறித்த விவரணங்கள்!  பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள்! இதன்மூலம் ராவ் பழைய புத்தகக் கடைகள் குறித்த வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். அப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. பழைய புத்தகங்களை விற்பவர்கள், ஒரு புதினத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்களைப் போல இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுடைய உள்ளிட்ட குணாதிசயங்கள் எளிமையான வாழ்க்கை, அகந்தை, சிடுசிடுப்பு, பேரன்பு, அழுக்கும் தூசியும் படிந்த இருப்பிடங்கள் என எல்லாவற்றையும் புத்தக அறிமுகங்களுக்கு ஊடாக ராவ் சுவாரஸ்யமாக விவரித்துச் செல்கிறார்.
ஒரு காலத்துச் சென்னையில் பிரசிதித்தி பெற்றிருந்த மூர் மார்க்கெட்டில் அவர் சந்தித்த நாயக்கர், முதலியார், ஐரே, மௌண்ட்ரோடு தர்காவுக்கு வெளியில் மரத்தடியில் கடை பரப்பியிருந்த அப்துல்கரீம், சேலம் நடேச ஆச்சாரி, ஆழ்வார்பேட்டை மூர்த்தி, லஸ்கார்னர் முருகேசன், ஆழ்வார், எல்.ஐ.சி.கட்டடத்தை அடுத்த நடைபாதைக் கடை ஊமையன், நங்கநல்லூர் எத்திராஜு... இப்படி விதம் விதமான பழைய புத்தக வியாபாரிகளை, விட்டல்ராவ் இந்த நூலில் தனக்கே உரித்த மொழியில் அறிமுகப்படுத்துகிறார்.
மூர்மார்க்கெட் முதலியாரிடமிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் 12 புத்தகங்கள், கோர்தான்ஹார்னர் எழுதிய
திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ போன்ற முக்கியமான புத்தகங்களை அவர் வாங்கியிருக்கிறார். இதில் திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ நூலை எழுதிய கோர்தான்ஹார்னர் இரண்டாம் உலகப்போர்க் கைதி. அது ஒரு யுத்த சேதி சித்திரக் குறிப்பு. யுத்த அனுபவங்களுடன், கைதி முகாம் நாட்களையும் இணைத்து மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களுடன் படைக்கப்பட்டுள்ள அழகியல் அம்சம் நிறைந்த நூல் என்று அதைக் குறிப்பிடும் ராவ் அந்த ஓவியங்களையும் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச் செய்திருக்கிறார். கவசமோட்டார் தாக்குதல், ஜெர்மானிய ஒற்றன், இத்தாலிய அதிகாரி மற்றும் போர்க்காட்சிகள் என உண்மையில் அந்த ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. விட்டல்ராவ் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் நாமறிந்த செய்தி.
நேருவின் சுயசரிதை, தி டிராயிங்ஸ் ஆஃப் லியனார்டோ டா வின்சி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட Ôஇராமனுக்கு ஒன்பது மணிநேரம்Õ (ழிவீஸீமீ லீஷீuக்ஷீs tஷீ ஸிணீனீணீ) மாப்பசான் கதைகள், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் நாவல்,  டிரேசி டைகர், மை நேம் இஸ் ஆரம் போன்ற புத்தகங்களையும், கோலியர்ஸ்,  தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட், லைஃப், ஆப்ஜர், என்கவுன்ட்டர், இம்பிரின்ட், தி சண்டே டைம்ஸ், தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களையும் ராவ் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறார்.
நம்முடைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. பிரபஞ்சன் திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். சிலர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ராவ் அந்த அனுபவங்களை ஒரு நூல் முழுக்க எழுதிப் பார்த்திருக்கிறார். அவருடைய வாசிப்பின் ருசி வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிந்திருக்கிறது.
Ôமூர்மார்க்கெட் எரிந்து முடிந்ததுÕ என்கிற பத்தாவது அத்தியாயம் சென்னையின் ஒரு கால கட்டத்து வரலாற்று சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.
ÔÔஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம்? எது நாயக்கர் கடையிருந்த இடம்? என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்... ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம் தித்தோம்....ÕÕ
என்று ராவ் எழுதும்போது மனம் வலிக்கிறது.
 விட்டல்ராவின் இந்த புத்தகம் தமிழி¢ல் ஒரு புதிய முயற்சி என்று கூறுமிடத்து, எனக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்குமான உறவை ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் அது... ஏழாம் பொருத்தம்! அவர்கள் மௌனிகள், கர்விகள், ஒரு தங்கச் சுரங்கத்தை கட்டி மேய்ப்பதான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நான் பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். ஒரு போதும் சண்டை சச்சரவு இல்லாமல் எங்களுக்கு பேரம் நிகழ்ந்ததில்லை. Ôபேரம் இல்லாமல் பழைய புத்தகம் வாங்குவது எனக்கு அனாச்சாரம்Õ என்கிறார் ஓரிடத்தில் ராவ். வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து நான் மிரண்ட சம்பவங்கள் உண்டு. இது குறித்து இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. மறுபடியும் பேசுவோம்.
***
  சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள சில நூல்களைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணப் புகையிலை,  பாகிஸ்தான் போகும் ரயில், தென் காமரூபத்தின் கதை இப்படிச் சில. இந்த வரிசையில் நிர்மலா மோகன் தொகுத்த Ôதமிழ்ச் சித்தர் இலக்கியம்Õ என்னை வெகுவாக ஈர்த்தது. சித்தர் பாடல்களை உதிரியாகப் பல நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த எனக்கு, பதினெண் சித்தர்களின் முக்கியப் பாடல்கள் ஒரே நூலில்  இருக்கக் கண்டதும் மகிழ்ச்சி! சித்தர்கள் மீதான வியப்பும் பிடிப்பும் எனக்குச் சிறுவயது முதலே இருந்து வந்திருக்கிறது. போகர் என்னும் சித்தன் வாழ்ந்த தென்பழனி மலைக்கருகில் பிறந்ததால் எனக்கு இந்த சித்தர்பித்து பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனது பிராயத்தில் எங்கள் ஊரில் நோய் கண்டால் சித்தவைத்தியம் செய்வது மிகப் பிரபலம். இன்றைக்கும் பழனியிலுள்ள மலையப்பசாமி வைத்தியசாலை உள்ளிட்ட சில நிறுவனங்களால் சித்த வைத்தியம் பாவிக்கப்படுகிறது.
சித்தர்கள் அழியாத உடலும் சாகாத நிலையும் பெற்றவர்கள் என்பதெல்லாம் சற்று மிகையெனப்பட்டாலும் அவர்கள் பற்றற்றவர்கள்; வெயில், மழை, காடு, மேடு என எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் வழியே பயணித்தவர்கள், மெய்ஞானிகள் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், சுப்பிரமணியர், வால்மீகி, இராமத்தேவர், கருவூரார் என பதினெட்டுச் சித்தர்களின் முக்கியமான பாடல்களையும் வாழ்வையும் இந்த நூல் நமக்கு விளம்புகிறது.
Ôசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்Õ என்கிறார் மாணிக்க வாசகர். இதில் Ôஅத்தன்Õ என்கிற பிரயோகத்திற்கு தலைவன், தலைமை தாங்குபவர் என்னும் பொருள் உண்டு. அத்தனைத்தான் அத்தாவாக்கி, தமிழ் முஸ்லிம்கள் அப்பா என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். மாணிக்கவாசகர் மட்டுமல்ல நம்முடைய மகாகவி பாரதியும் தன்னைச் சித்தனாகக் கருதியதுண்டு.
ÔÔஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்ÕÕ
என்று அவர் பாடியிருக்கிறார்.
சித்தர்களை வைதீகத்திற்கு ஆதரவாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது. ஆசைகளைத் துறக்க வலியுறுத்தும் பாடல்களை உதாரணங்காட்டி அவநம்பிக்கைவாதிகளாக்கிப் பார்த்தவர்கள் உண்டு.
நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணென்று
சொல்லுமந்திரம்  ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோÕÕ
என்று சித்தர் சிவவாக்கியர் வலுவாகக்கேட்கிறார்.
ÔÔஆலயத்துள் நின்ற ஆறு சமயத்தோரும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்ÕÕ
 என்கிறார் திருமூலர். எனவே கலாநிதி கைலாசபதி கூறியதைப்போல சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம். மக்களிடம் படிந்திருக்கிற குறைகளைக் களைவது மட்டுமன்று; ஜாதி மதங்களை நோக்கியும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் சித்தர்கள்.
பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
என்கிற சித்தர் சிவவாக்கியர் குரலில் சாதிய சனாதனத்தை ஏற்றத்தாழ்வுகளை வன்மையாகச் சாடும் தொனி பொதிந்திருக்கிறது.
  இஸ்லாம் சமூகத்திலும் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்படுகின்றனர். குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது அப்பா போன்ற ஆண் சித்தர்களுடன், தென்காசி ரசூல்பீவி, ஆசியாம்மா உள்ளிட்ட பெண் சித்தர்களும் அங்கே இருந்ததுண்டு. சித்தர் உலகம் ஆழமானது. தத்துவார்த்தச் சுழலில் நம்மை சிக்க வைத்து, சித்தம் தெளியவைப்பது.
***
நட்பு, காதல், அரசியல், கலை இலக்கியம் என எல்லா வெளிகளிலும் நண்பர்களில் சிலர் தங்களின் சுயசாதி அடையாளத்தை தருணம் பார்த்து வெளிப்படுத்திக் கொள்வது, அதற்காக பெருமிதப்படுவது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நான் அருவருப்படைந்திருக்கிறேன். எங்கெல்லாம் திறமை புறக்கணிப்புக்குள்ளாகி அவ்விடத்தை பிரிதொன்று வலிய அபகரித்துக் கொள்கிறதோ, அங்கே சாதி, மதம், பணம் இவற்றில் ஏதோ ஒன்று தம் பங்கை செவ்வனே செய்திருக்கிறது என சாமானியனும் புரிந்து கொண்டிருக்கும் காலமிது. ஆனால் இதற்கான எதிர்வினை எதுவுமற்று எல்லாவற்றிற்கும் சமரசமாகிக் கொள்ளும் ஒருவித மழுங்கைத் தனத்திற்கு நம்மை ஒப்படைத்து விட்டு ‘ஙே’ என்று நிற்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றிப் படிந்துள்ள சாதியின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதில் நான் அவநம்பிக்கை கொள்கிறேன். திரைப்படங்கள், தெருக்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களில் சாதியை நீக்க முடிந்தது மட்டுமே இந்த முதுகெலும்பற்ற அரசுகளின் உச்சபட்ச சாதனையாக இருந்திருக்கிறது. ஆனால் காலகாலமாக நம் உள்ளத்தில் படிந்துள்ள சாதிக் கசடை எந்த உத்தரவின் மூலமாக அகற்றப்போகிறோம்? பேராசிரியர். நா. வானமாமலை எழுதிப் பல பதிப்புகள் கண்ட Ôதமிழ்நாட்டில் சாதிசமத்துவப் போராட்டக் கருத்துக்கள்Õ என்றொரு புத்தகம் வாசித்தபோது  எனக்கு இது போன்ற அபிப்ராயங்கள் எழுந்தன.
 இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த எல்லா சாதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களும் தத்தமது சாதியைப் பிரதானப்படுத்த ஆளுக்கொரு நூல் எழுதுவிக்கிற பணியில் இறங்கியிருக்கிறார்கள். 1901ல் வெளியான வருணசிந்தாமணி வேளாளர் சமூகத்துப் பெருமைகளைப் பேசுகிறது. வேளாளர் சைவ சமயத்தவர் என்பதால் அவர்கள் பிராமணரைவிட மேலானவர்கள் என்று நிரூபிக்க இந்நூலாசிரியர் வேதங்களையும் பழந்தமிழ் நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 1904ல் கிராமணிகள் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள க்ஷத்திரியகுல விளக்கம் என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். க்ஷத்திரியரான ஜனகனிடமிருந்து தான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்கிற அறிவைப் பெற்றனராம். எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு குரு முறையாவார்கள் என்று அந்த நூல் கூறுகிறது. 1937ல் வெளிவந்த Ôநாடார் மன்னரும் நாயக்கர் மன்னரும்Õ என்னும் மற்றொரு நூல் நாடார் சாதிப் பெருமைகளை வியந்தோதுகிறது.
பஞ்ச திராவிட முதல்வன்
பரம்பரை பாண்டிய நாடன்
கல்விச் சங்கமுடையவன்
காசு முத்திரை விடுத்தவன்
சப்தகன்னி புத்திரன்
தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்
இது அந்த நூலில் காணப்படும் நாடார் மகாஜனங்களைக் குறித்த குலப் பெருமைப் பாடல்.
1909ல் வெளியான பரவர் புராணம் பரதவர்களின் உயர்வைப் பாடுகிறது. சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுனன் பரதகுலமன்னரின் மகள் சித்திராங்கதையை மணந்து பாண்டியவம்சம் தோன்றியது போன்ற இதிகாச நிகழ்வுகளைப் புனைந்து அவற்றுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் வெளிப்படுகிறது. கார்காத்தார் சாதி உயர்வைப் பேசும் Ôகிளை வளப்ப மாலைÕ என்கிற நூலும் இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நூல்களின் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்குரல்தான். அதாவது பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை இந்நூலாசிரியர்கள் அனைவரும் மறுக்கின்றனர். ஆனால் வருணாசிரமப் பிரிவுகளை இவர்களில் எவரும் எதிர்க்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வருணாசிரமத்தில் தங்கள் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தாழ்ந்த நிலைகளைத்தான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேராசிரியர் நா.வா. தெளிவாகத் தனது ஆய்வுரையில் வெளிப்படுத்துகிறார். 48 பக்கங்களே கொண்ட இந்த சிறிய புத்தகம் தமிழ்நாட்டில் சாதிகள் கட்டமைக்கப்பட்ட விதத்தை ஒருவித தீவிரத் தன்மையுடன் பேசுகிறது.
இதை வாசிப்பதும் பிறகு விவாதிப்பதும் கூட சாதியத்துக்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

• வாழ்வின் சில உன்னதங்கள்
நர்மதா பதிப்பகம், சென்னை- \- -17
• தமிழ்ச் சித்தர் இலக்கியம்
சாகித்திய அகாதெமி, புதுடெல்லி.
• தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
பாரதி புத்தகாலயம், சென்னை-- \ 18


No comments:

Post a Comment